1964ஆம் ஆண்டு புயலால் அழிந்த தனுஷ்கோடி அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களால் மீண்டும் சுற்றுலாத் தலமாக உருவெடுத்து வருகிறது.
ராமேசுவரத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. 1964ஆம் ஆண்டுக்கு முன்பு வரை வணிக நகரமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கியது. இங்கிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு 2 கப்பல்கள் சென்று வந்தன. துறைமுகம், மருத்துவமனை, பள்ளிகள், அஞ்சல் நிலையம், ரயில் நிலையம், ரயில்வே ஊழியர் குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்களும் இருந்தன.
1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இரவில் பெய்த பலத்த மழையாலும் வீசிய புயலாலும் கடல் கொந்தளித்ததில் தனுஷ்கோடி மூழ்கியது. இந்தப் பேரழிவில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தலைமன்னாருக்கு நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தனுஷ்கோடிக்கான ரயில்போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட தனுஷ்கோடிக்குச் சுற்றுலாப் பயணிகள் மட்டும் சென்றுவந்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதி வரை பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று அங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரம் உள்ள தனுஷ்கோடிக்கு தனியார் வேன், ஜீப்களில் சென்று வந்தனர். இந்நிலையில் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரமான சாலை அமைக்கப்பட்டது. அடுத்த கட்டமாகத் தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்கவும், அங்குத் துறைமுகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.