ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக்கூடாது

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக்கூடாது எனவும், காவல்துறை டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு குறித்து காவலர்களுக்கான அறிவுரைகளை அவர் வழங்கியுள்ளார்.

ஊரடங்கின் போது வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது என்றும், ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிமுறை மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது என்றும், அப்படியே வாகனத்தினை கைப்பற்றினாலும், சில மணி நேரங்களில் அவற்றை விடுவித்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இ-பாஸ் வைத்து பயண அனுமதி பெற்றுள்ள வாகனங்களை அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகள்படி அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள காவல்துறை டிஜிபி,

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கான வழியை ஏற்படுத்துதல் வேண்டும் என கூறியுள்ளார்.

50 வயதை கடந்த காவலர்கள் மற்றும் பெண் காவலர்களை, வாகன சோதனை பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் கேமிராக்கள் மூலம், மக்கள் கூடுவது கண்டறியப்பட்டால், கண்ணியமான முறையில் அறிவுறுத்தி, கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என டிஜிபி தெரிவித்துள்ளார்

Exit mobile version