சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் கருவறையில் லிஙகத்தின் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாராமங்கலத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பௌர்ணமியை முன்னிட்டு மூன்று நாட்கள் மாலை நேரத்தில் கருவறையில் உள்ள சிவன் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நடைபெறுவது வழக்கம். மூன்றாவது நாளான நேற்று சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி பட்ட நிலையில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனையடுத்து பக்தர்கள் ஹரஹரா என முழக்கமிட்டு சிவனை வணங்கினர். 20 நிமிடம் நீடிக்கும் இந்த அதிசய நிகழ்வை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.