40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் தினமும் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
அத்தி வரதர் வைபவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. இதுவரை 14 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து சென்றுள்ளனர். நாளுக்கு நாள் பக்தர் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
அத்தி வரதரை தரிசிக்க பக்தர்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசிக்க கூடினர். இதையடுத்து நள்ளிரவு ஒரு மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஞாயிற்றுகிழமையும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது . இந்த நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவ தரிசன நேரத்திற்கான நிர்வாக காரணங்கள் உள்ளிட்டவைகளுக்காக தரிசன நேரம் நேரம் குறைக்கப்படுவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்திவரதரை காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.