வரும் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த எம்.சங்கிலி என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சுபாஷ் சந்திர போஸுடன் இணைந்து சுதந்திரத்துக்காக போராடிப் பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். தனது சொத்துக்களை விற்று ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகச் செலவு செய்துள்ளார். இவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இளம் தலைமுறையினர் இவரது வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில் 1978 – 79 ஆண்டு, ஆறாம் வகுப்பு பாடத்தில், இவரது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2018 – 19 கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தில் இருந்து, அவரின் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசுக்கு மனு செய்தும் நடவடிக்கை இல்லாததால், பாடத்திட்டத்தில் மீண்டும் அவரது வாழ்க்கை வரலாற்றைச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
செப்டம்பர் 28ம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கு வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் வரும் கல்வியாண்டில் 7-ஆம் வகுப்புக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.