சென்னையில், கல்லூரிகளை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கும் காவலன் செயலி குறித்து, காவல்துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்காக, காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடக்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு காவலன் செயலி குறித்து எடுத்துரைத்தார். மேலும் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள், எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இதேபோல் சென்னை, திரு.வி.க நகர் காவல்துறை சார்பில், இல்லத்தரசிகளுக்கு காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இல்லத்தரசிகளுக்கு காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் காவலன் செயலியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.