வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவிகளைப் பெறுவதற்கான ஆலோசனை நடத்தினார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சிகாகோ பயணத்தை முடித்துக் கொண்டு அவர் வாஷிங்டனுக்குச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வடஅமெரிக்கத் தமிழ்ப் பேரவைத் தலைவர் சுந்தர் குப்புசாமி, உலகத் தமிழ் இளைஞர் பேரவை அட்லாண்டா தலைவர் பார்த்திபன், வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜாராம் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் துணை முதலமைச்சரை வரவேற்றனர்.
வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற அவர், தமிழகத்தில் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவிகளைப் பெறுவதற்கான ஆலோசனை நடத்தினார். அப்போது, உலக வங்கி செயல் இயக்குநர் அபர்ணா, தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் உலக வங்கி அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோல், வாஷிங்டன் டிசியில் உள்ள IMF எனப்படும் பன்னாட்டுப் பண நிதியத்தின் அலுவலகத்திற்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அங்கு, தமிழகத்தில் பொது நிதி செலவினம் மற்றும் நிதி திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
Discussion about this post