துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறைப் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை பெற்று வந்தார். இதே போன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று முதல் 17ந் தேதி வரை அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கு செல்லும் அவர், தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து, உலக வங்கியின் தெற்காசிய பிரிவு உயர் அலுவலர்களுடன் விவாதிக்கிறார்.
சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர், பயணத்தின் முதற்கட்டமாக சிகாகோ சென்றடைகிறார். சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக 9ம் தேதி நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.
நவம்பர் 10ம் தேதி, American Mutli Ethinic Coalition Inc., சார்பாக நடத்தப்படும் Global Community Oscars 2019 விழாவில் International Rising Star of the Year – Asia Award என்ற விருது துணை முதலமைச்சருக்கு வழங்கப்படுகிறது.
12ம் தேதி சிகாகோ நகர மேயர், இல்லினாய்ஸ் ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து Global Community Oscars 2019 விழா மற்றும் Indian American Business Coalition & American Tamil Entrepreneurs சார்பாக நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கில் அவர் கலந்து கொள்கிறார்.
13ம் தேதி, வாஷிங்டன் டிசி செல்லும் துணை முதலமைச்சர், Indian American Business Coalition, USA மற்றும் American Mutli Ethinic Coalition Inc., அமைப்புகள் சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
14ம் தேதி ஹூஸ்டன் நகருக்கு செல்லும் அவர், தமிழ் அமைப்புகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தொழில் முனைவோரிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார்.
15ம் தேதி ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான Electronics Donor Board-ஐ துணை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
16ம் தேதி நியூயார்க் செல்லும் அவர், Indian American Community & Tamil Associations சார்பாக ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
துணை முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தின் போது, தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மற்றும் நிதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் உடன் செல்கின்றனர்.
17ம் தேதி அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்புகிறார்.