விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து துணை முதல்வர் பிரசாரம்

ஸ்டாலின் ஒரு காலமும் முதல்வராக முடியாது என துணை முதலமைச்சர் ஓ. பண்ணீர் செல்வம் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை பகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உடன் இருந்தார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதை துணை முதலமைச்சர் சுட்டிக் காட்டினார். திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பல பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என குற்றம்சாட்டிய துணை முதலமைச்சர், ஸ்டாலின் ஒரு காலமும் முதல்வராக முடியாது என கூறினார். அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதலமைச்சராக முடியும் என துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பள்ளியந்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துணை முதலமைச்சர், 2023க்குள் தமிழகம் குடிசை பகுதிகள் அற்ற மாநிலமாக திகழும் என்று உறுதி அளித்தார். தமிழகத்துக்கு துரோகம் செய்ய நினைத்த ராகுலை பிரதமராக்க ஸ்டாலின் துடித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

அனுமந்தபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர், 2023 ஆண்டிற்குள் தமிழகம் அனைத்து கிராமங்களும் குடிசைகள் இல்லாதா கிராமமாக மாறும் என்று உறுதியளித்தார்.

சங்கீதமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்தார்.மேலும், கடந்த திமுக ஆட்சி காலத்தில், தமிழகம் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதை குறிப்பிட்ட அவர், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version