டெண்ட் கொட்டாவின், கனா காணும் காலங்கள்

குளு குளு ஏசி திரையரங்குகள் இருந்தாலும் வேலூர் மாவட்டத்தில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் டெண்ட் கொட்டா- மண் தரையில் அமர்ந்து படுத்து கொண்டும் சாய்ந்து கொண்டும் கவலை மறந்து படம் பார்க்கும் பொதுமக்கள் கடந்த இருபது ஆண்டுகளில் திரையரங்குகளின் வளர்ச்சி அபரீதமாக உள்ளது.

பஞ்சு மெத்தையினாலான இருக்கைகள், குளு, குளு ஏசி அறைகள், அகலமான ஒளித்திரை, பப்ஸ், பாப்கான், என சகல வசதிகளும் தற்போதைய திரையரங்குகளில் உள்ளது.

ஆனால் , அந்த காலத்து சினிமா கொட்டாயில் , தரையில் படுத்துக்கொண்டும், சாய்ந்து கொண்டும் கால் நீட்டி
அமர்ந்து கொண்டும் படம் பார்க்கும் சுகமே தனி சுகம் தான் என்பதை 70, 80 களில் ஆண்டுகளில் பிறந்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஆற்று மணல் நிரப்பப்பட்ட தரையும், திறந்த வெளியிலான திரை அமைப்பும் கொண்ட டென்டு கொட்டாயில் படம் பார்க்க அந்தக் காலத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் முண்டியடித்துக் கொண்டு செல்வார்கள். ரூ.100 முதல் 300 வரை டிக்கெட் எடுத்து படம் பார்க்கும் இளைஞர்களுக்கு, அந்த காலத்தில் வெறும் 10 பைசா 20 பைசா 30 பைசாவிற்கு சினிமா காட்டிய கதைகளை சொன்னால் வியப்பாகத் தான் இருக்கும். சினிமா கொட்டாயில், மணலை கொட்டி மேடை அமைத்து அமர்ந்து கொண்டும், தேவைப்பட்டால் படுத்துக் கொண்டும்

சாய்ந்து கொண்டும் வசதிக்கேற்ப மகிழ்ச்சியுடன் படத்தை கண்டு ரசிப்பார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த டூரிங் டாக்கீஸ் அழிவின் விளிம்பிற்கே சென்று விட்டது என்றால் அது மறுக்க முடியாத உண்மை. இந்த பேஸ்புக், வாட்ஸ்அப் யுகத்தில் டெண்டு கொட்டாய்களே வழக்கொழிந்து போய்விட்ட நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்றைக்கும் டூரிங் டாக்கீஸ் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அருகில் பூட்டுத்தாக்கு என்ற கிராமத்தில் 1975ல் கணேசன் என்பவர் “விக்னேஷ் திரையரங்கம்” என்ற பெயரில் டூரிங் டாக்கீஸ் அமைத்தார்..

நாளடைவில் நவீன வளர்ச்சி காரணமாக இங்கு மக்கள் கூட்டம் குறைந்தாலும் கூட, கணேஷ் தனது தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து இந்த டென்டு கொட்டாவை நடத்தி வருகிறார்.. வருவாய் குறைந்தாலும், இந்த டூரிங் டாக்கிஸை கைவிட அவருக்கு மனமில்லை.. அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் கடைசி வரை இந்த டூரிங் டாக்கீஸ் நடத்தியே தீரவேண்டும் என்ற பிடிவாத்த்துடன் இன்றுவரை நடத்தி வருகிறார்.. இங்கு மிக குறைந்த கட்டணத்தில் புது புது படங்களை திரையிட்டு வருகிறார் கணேசன்.

வேலூரில் குளு, குளு ஏசி அறையுடன் நவீன திரையரங்கம் பல இருந்தாலும் இன்றைக்கும் இந்த டென்டு
கொட்டாவிற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். தற்போது கணேசனின் மகன் ரமேஷ் இந்த டூரிங் டாக்கீஸை நடத்தி வருகிறார் .தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான் டூரிங் டாக்கிஸ் இருக்கிறது என்ற தகவல் கிடைத்து, கோவை சேலம் மதுரை திருச்சி தஞ்சாவூர் என பிற மாவட்டங்களில் இருந்தும் பலர் அங்கே படம் பார்க்க வருகிறார்கள்.

டெண்டு கொட்டயில் படம் பார்க்கும் அனுபவத்தை பெற பிற மாநிலங்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனராம்.. வெறும் 20 மற்றும் 25 ரூபாய் தான் கட்டணம்…

தினமும் சராசரியாக 50 முதல் 100 பேர் வருவதாகவும், ரஜினி, அஜித், விஜய் படம் என்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2000 பேர் வரை கூட வந்து செல்கிறார்களாம். பழைய படங்கள் மட்டுமல்லாமல் புதிய படங்களை திரையிடுவதால், சனி ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதுகிறது.

Exit mobile version