புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோயிலில் அனுமதி மறுப்பு

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று, தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் கோயில்களில் சுவாமியை வழிபட அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோயிலின் வாசலில் நின்று சுவாமியை வணங்கி சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தர்கள் தரிசித்து சென்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் கோயில் ராஜகோபுரத்தில் உள்ள சுவாமி சிலைக்கு பக்தர்கள் மாலை அணிவித்து, திருவிளக்கை ஏற்றி வைத்து சுவாமியை வணங்கினர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் மலை கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதனால் வழக்கமாக நடைபெறுகின்ற ஆகம விதிகள்படி பூஜைகள் தாமதமாக நடைபெற்றது. கோயிலுக்கு வரும் பக்தர்களை மலையடிவாரத்திலே போலீசார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.

மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் பிரசன்ன வெங்கடஜலாபதி கோயிலில் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் பூட்டப்பட்ட கோயில் வாசல் முன்பு நின்று பக்தர்கள் சுவாமியை வணங்கிவிட்டு செல்கின்றனர். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வரும் நிலையில், அதனை கருத்தில் கொண்டு அரசு அனுமதி வழங்கியிருக்க வேண்டும் என்று பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அமைந்துள்ள பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையில் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோயில் கோபுர முன்புற வாசலில் நின்று பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர்.

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பூட்டப்பட்டிருந்த கோயில் நுழைவுவாயில் கேட்டில் பக்தர்கள் துளசி மாலை அணிவித்து சுவாமியை வழிபட்டு சென்றனர். 

 

Exit mobile version