ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், பிரபலங்களும், திரையுலக நட்சத்திரங்களும் வாக்களித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். வாக்குப்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே தனது வாக்கினை அவர் பதிவு செய்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.

நடிகர் அஜித்குமார் தனது மனைவியுடன், சென்னை திருவான்மியூர் பீச் ரோட்டிலுள்ள, தொடக்கப் பள்ளியில், தனது வாக்கினை செலுத்தினார்.

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார் சபா வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

நடிகர் கார்த்தி, தனது மனைவி ரஞ்சனியுடன் சென்று வாக்கைப் பதிவு செய்தார்.

சென்னை, கோடம்பாக்கம் மாநகராட்சி காலனியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடிகர் விஜய்சேதுபதி தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் தலைவரை தேர்வு செய்யும் பொறுப்புடைய வாக்களர்களுக்கு, தான் வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

நடிகர் தனுஷ், சென்னை டிடிகே சாலையில் உள்ள ஃபிரான்சிஸ் பள்ளியில், தனது வாக்கைப் பதிவு செய்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வாக்குச்சாவடியில் நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு குடும்பத்தினருடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

Exit mobile version