மத்தியில் நிலையான ஆட்சியை தரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
வாரணாசியில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ள பிரதமர் மோடி, முன்னதாக அங்கு நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஐந்தாண்டு பாஜக ஆட்சியின் முடிவில் அதற்கு ஆதரவான அலை வீசுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் ஜனநாயகம் வெற்றிபெற தான் விரும்புவதாக தெரிவித்த அவர், வாக்குப்பதிவில் இதுவரை உலகளவில் உள்ள சாதனைகள் அனைத்தையும் நாம் முறியடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தேர்தலில் நிலையான ஆட்சியை அமைக்க ஒவ்வொரு வாக்குகளும் முக்கியமானவை என்றும் அவர் கூறினார். மக்களவை தேர்தலில் அதிகளவில் வாக்குகள் பெற்று தான் வெற்றிபெறுவதை காட்டிலும் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்றும் அவர் குறிப்பிட்டார். தன்மீதான மக்களின் அன்பு மற்றும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிலையில் காலை 11 மணியளவில் அங்குள்ள பிரசித்திபெற்ற கல்பைரவா கோயிலில் வழிபாடு மேற்கொள்ளும் அவர் 11.30க்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.