எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி, கற்பனையை மட்டுமே அடிப்படையாக வைத்து தனக்கெதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவிந்திரநாத் குமார், 76 ஆயிரத்து 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், எந்தவித ஆதாரங்களையும் சமர்ப்பிக்காமல், கற்பனையின் அடிப்படையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும், தன்னையும் அ.தி.மு.க வையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது அரசியல் பழிவாங்கலுக்காக தொடரப்பட்டுள்ள வழக்கு என்பது நிரூபணமாவதாகவும், இதனை நிராகரிக்க வேண்டுமென்றும் அதில், குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை, மார்ச் 6 ம் தேதிக்கு நீதி மன்றம் தள்ளி வைத்தது.