தமிழகத்தில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பதனை பெங்களூரு ஆய்வகம் உறுதி செய்துள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பது குறித்த 2ம் கட்ட ஆய்வு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் நடத்தப்பட்டது. இதில் சென்னை தவிர்த்து தொற்று அதிகம் பாதித்த 765 இடங்களில் 22ஆயிரத்து 905 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், 5ஆயிரத்து 316 பேர் அதாவது 23சதவீதம் பேருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 49சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சம் நாகை மாவட்டத்தில் 9சதவீதத்தினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 31சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு நோய் எதிர்ப்பு சக்தி 23 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.