கொரோனா பாதிப்புடன் தப்பி சென்ற டெல்லி இளைஞர் கைது!

கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய டெல்லி இளைஞரை செங்கல்பட்டு அருகே காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.  டெல்லி பட்டேல் நகரை சேர்ந்த அந்த இளைஞர் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 7 ஆம் தேதி தொற்று இல்லை என மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நிலையில் 8 ஆம் தேதி பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினார். அந்த இளைஞரை கண்டால் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை கண்ட செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதி மக்கள், டெல்லி இளைஞரை பார்த்ததாக விழுப்புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இதன்பேரில் மாமண்டூர் அருகே படாளம் என்ற இடத்தில் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் அவர் எங்கெல்லாம் சென்றார், யாரோடு பழகினார் , என்றெல்லாம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version