ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

ஐ.பி.எல். தொடரின் 23-ஆவது போட்டியில் டெல்லி அணி, ராஜஸ்தான் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்விஷா, ஷிகர் தவான் அடுத்தடுத்து விக்கெட்களை பரிக்கொடுக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களுக்கு ரன் ஆவுட் ஆனார். இதனையடுத்து களம் இறங்கிய ஸ்டாய்னிஸ் 39 ரன்களும், ஹெட்மையர் 45 ரன்களும் சேர்த்து அணிக்கு வலு சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து 185 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆக, ஜெய்ஸ்வால் 34 ரன்களுக்கும், ஸ்மித் 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க 19 புள்ளி 4 ஓவர்களில், 10 விக்கெட் இழப்பிற்கு, அந்த அணியால் 138 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

இன்று நடைபெறவுள்ள போட்டிகளில், 24 ஆவது போட்டியில். கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதவுள்ளன. அபுதாபி மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று முப்பது மணிக்கு தொடங்குகிறது.

அதே போன்று, துபாயில் இரவு ஏழு முப்பது மணி அளவில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் மோதவுள்ளன.

Exit mobile version