மாநிலங்களவையில், 12 எம்பிக்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன.
இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 11வது நாள் அமர்வு இன்று கூடியது. அவை நடவடிக்கை தொடங்கியதும், 12 எம்பிக்கள் மீதான இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
அப்போது பேசிய மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி எம்பிக்கள் எது பேச வேண்டும்? எது பேச கூடாது என்பதை மத்திய அரசு தீர்மானிக்கக் கூடாது என்று தெரிவித்தார். 1
2 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யாமல் மத்திய அரசு பிடிவாதம் செய்கிறது என்றும், அமளியில் ஈடுபட மத்திய அரசு தான் தூண்டுகிறது என்றும் மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டார். மேலும், அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாகவும் காங்கிரஸ் எம்பிக்கள் அறிவித்தனர்.
அவைத் தலைவர் மற்றும் அவை முன்னவரிடம் பல முறை முறையிட்டோம். இதனை செய்ய வேண்டும், இதனை செய்யக் கூடாது என்று அரசு எங்களுக்கு உத்தரவிட முடியாது. எங்கள் உறுப்பினர் ஆனந்த் சர்மா தற்போது விளக்கமாக பேசினார். ஆனால், எங்கள் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது. எங்களை பிரச்னை செய்ய தூண்டிவிடுவதே அரசு தான். இடைநீக்க உத்தரவை ரத்து செய்யாமல் அரசு பிடிவாதம் பிடிக்கிறது. எனவே வெளிநடப்பு செய்கிறோம்.
இதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு, அவையை இப்படி தான் நடத்துவதா? என்றும், இவ்வாறு அவை நடைபெற தான் விரும்பவில்லை எனக் கூறி, மாநிலங்களவையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.
பின்னர், மாநிலங்களவை கூடியதும், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நீடித்ததால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.