சமூக வலைத்தளங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவரும் கைகளிலும் தவழ்கின்றன. ஸ்மார்ட்போன் மனித உடலின் ஓர் அங்கமாகவே மாறிவிட்ட நிலையில், டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகை விரல் நுனியில் கொண்டுவந்துள்ள ஸ்மார்ட்போன்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை ஒருபுறம் அறிவுசார் வளர்ச்சியை ஏற்படுத்தினாலும், அபரிவிதமான தொழில்நுட்ப வளர்ச்சி சிலரை அதள பாதாளத்தில் தள்ளிவிடுவதையும் மறுத்துவிட முடியாது. அப்படியொரு நிலையின் தொடக்கத்தை இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்க்ரீன்ஷாட் அம்பலமாக்கியுள்ளது… டெல்லியில் பள்ளி மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் உருவாக்கியுள்ள பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற பக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்தக் குழுவில், நொடிக்கு நொடி பாலியல் சீண்டல்கள், கூட்டு பாலியல் வன்கொடுமை பற்றிய உரையாடல்கள் நடந்துள்ளன… வகுப்பு தோழிகள், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டதும், கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான தகவல்களை, அப்பட்டமாக பகிர்ந்து கொண்டதும் கொடூரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது. டெல்லி மாணவர்களின் பாலியல் உரையாடல்கள் சமூக வலைளத்தளங்களில் வெளியான நிலையில், அவர்களது குரூர எண்ணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தத் தகவலை கசிய விட்டவர்களை டெல்லி மாணவர்கள் மிரட்டியும் உள்ளனர். இதுதொடர்பாக மீடூ இந்தியாவின் ட்விட்டர் பக்கம் தனது கவலையை பதிவிட்டுள்ளது. ஆணாதிக்கம், ஆண்மை தொடர்பான அடிப்படை விஷயங்களின் கவனம் செலுத்தாவிட்டால், BoysLockerroom தொடரும் என்று தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளது.
விஷயம் பூதாகரமாகியுள்ள நிலையில், இன்ஸ்டா குழுவில் மெசெஜ் செய்த மாணவர்கள் பலரும் தங்களது கணக்கை டீ-ஆக்டிவேட் செய்துள்ளனர். இதனிடையே டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி, வாய்கூசும் அளவுக்கு பாலியல் வன்கொடுமை பற்றிய உரையாடல்களை நிகழ்த்திய டெல்லி மாணவர்களை கைது செய்யுமாறு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தானாகவே வழக்கை கையில் எடுத்துள்ள டெல்லி சைபர் கிரைம் போலீஸார், டெல்லி மாணவர்களின் வலைத்தள முகவரி குறித்து இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாகவும், 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் இதுபோன்றவர்களின் பின்னணியை ஆராய்ந்து முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன.