டெல்லி அரசு அதிகாரம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதை அடுத்து, இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் ஆட்சி நிர்வாகம் தொடர்பாக டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து ஆம்ஆத்மி அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், யூனியன் பிரதேசமான டெல்லியின் ஆட்சி நிர்வாக அதிகாரம், துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளதாக கடந்த 2016-ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து டெல்லியில் ஆளும் ஆம்ஆத்மி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே ஆட்சி அதிகாரம் உண்டு என கடந்த ஆண்டில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
சட்டம்-ஒழுங்கு, நிலம், அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநருக்கே அதிகாரம் உண்டு என கடந்த 2015-ல் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டதை, ஆளுநர் பைஜல் உச்சநீதிமன்ற அமர்வில் மேற்கோள் காட்டியதையடுத்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில், தற்பொழுது, உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பாணையை மேற்கோள் காட்டி, சட்டம் ஒழுங்கு, நிலம், அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநருக்கே அதிகாரம் என உச்சநீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஆனால், மின்துறையில் மாறுதல்கள் கொண்டு வருவது, வேளாண் நிலங்களுக்கான விலைகளை நிர்ணயிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க டெல்லி அரசுக்கே அதிகாரம் உண்டு என மற்றொரு நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு டெல்லியின் நிர்வாகம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளதையடுத்து, இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.