கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சையளிக்க தாமதித்த திருப்பத்தூர் அரசு மருத்துவமனை ; இரண்டு கண்களையும் அகற்றும் நிலை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சரிவர சிகிச்சை அளிக்காததால் இரண்டு கண்களையும் அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூரைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறிகள் இருந்தன.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லை எனத் தெரிவித்த மருத்துவர்கள், சென்னைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களாகியும் பரிந்துரைக் கடிதம் வழங்காமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் தாமதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேறு வழியின்றி தனது மனைவியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சுமதியின் கணவர் ரஞ்சித் தெரிவித்தார்

தாமதமாக சிகிச்சை எடுத்ததால் தனது மனைவிக்கு இரண்டு கண்களிலும் பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிகிச்சைக்காக பல லட்ச ரூபாய் செலவழிக்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கருப்பு பூஞ்சை நோய் எளிதாக தாக்குகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி வரை கருப்பு பூஞ்சை நோயால் யாரும் பாதிக்கப்படாத நிலையில், கடந்த 4 நாட்களில் 75 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Exit mobile version