10 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி கார்த்தி சிதம்பரத்திற்கு கெடு

டெல்லியில் உள்ள வீட்டை 10 நாட்களுக்குள் காலி செய்யுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதி
எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை கெடு விதித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. டெல்லியில் ஜோர்பாக் பகுதியில் உள்ள வீடும் இதில் அடங்கி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டே இந்த வீட்டை பறிமுதல் செய்திருந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரம் இதுவரை வீட்டை காலி செய்யவில்லை எனகூறப்படுகிறது.

இதனால் 10 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன்படி, இன்னும் 10 நாட்களில் வீட்டை காலி செய்து, அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை வரும் 9ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version