கோயில் நிலத்தை பத்திரம் தயாரித்து பிளாட்டாக விற்பனை !

புதுச்சேரி பாரதி வீதி அருகே அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு அன்னை நகர் பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 64 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. அதில் ஆறரை கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஆயிரம் சதுரடிக்கு மேல் உள்ள காலி நிலத்தை கும்பல் ஒன்று போலி பத்திரம் தயாரித்து பிளாட்டாக விற்பனை செய்துள்ளதாக, கோயில் நிர்வாக செயலாளர் சுப்ரமணி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி மோகன் குமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

விசாரணயின்போது, கோயில் நிலம் அருகே பல ஏக்கர் நிலம் வைத்திருந்த ரத்தினவேல், இந்த நில அபகரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட ரத்தினவேல் திருவான்மியூரில் வசித்து வருகிறார். அவர் கோயில் நிலத்தை தனது நிலத்துடன் சேர்த்து போலி பத்திரம் தயாரித்து தனது மனைவி மோகனசுந்தரி பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மனோகர் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். மனோகர், இதற்கு பட்டா சிட்டா மாற்றம் செய்து, அப்போதிருந்த கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி உதவியோடு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்துள்ளார்.

சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்த நிலையில், போலி பத்திரம் தயாரித்து நில மோசடி அபகரிப்பில் ஈடுபட்ட ரத்தினவேல் – மோகனசுந்தரி தம்பதி, மனோகர் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில் அவர்களது செல்போன் எண்களை வைத்து சென்னை குன்றத்தூரில் பதுங்கியிருந்த அவர்களையும், புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பத்தில் இருந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமியையும் கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த நில மோசடியில் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version