அலங்கார ஊர்திகள் தேர்வு எப்படி? பெருமைகளை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள்..!

குடியரசு தினவிழா அணிவகுப்பில் மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடக்கும். இதில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வது யார்? எந்த அடிப்படையில் அவை தேர்வு செய்யப்படுகின்றன? என்பதை விரிவாகச் சொல்கிறது இந்தத் தொகுப்பு…

குடியரசு தினவிழாவிற்கு சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் அதாவது, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் சுமார் 80 மத்திய அரசுத்துறைகளுக்கு கடிதம் எழுதி, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கும்.

அப்போது ஒவ்வொரு மாநிலமும், துறையும், தங்களின் பெருமைகளை பறைசாற்றும் கருப்பொருளோடு அமைந்த அலங்கார ஊர்திகளின் முன்மொழிவுகளை மத்திய பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி வைக்கும்.

இந்த அலங்கார ஊர்திகளை தேர்வு செய்ய கலை, கலாசாரம், ஓவியம், இசை, நடனம் என்று பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை பாதுகாப்புத்துறை நியமித்திருக்கும்.

இந்தக் குழுவே மாநிலங்களின் முன்மொழிவுகளை பரிசீலிக்கும். நாட்டின் உயர் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சார்ந்த விஷயம் என்பதால் பல்வேறு கோணங்களில் இவை பரிசீலிக்கப்படும்.

அலங்கார ஊர்திகளின் கருப்பொருள் அதாவது தீம், கலைவடிவம், கலாசார பிரதிபலிப்பு, ஓவியங்கள், சிலைகள், இசை, நடனம், அலங்கர ஊர்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள், ஊர்தியின் வடிவமைப்பு, உள்ளிட்ட அலங்கார ஊர்தியின் ஒட்டுமொத்த அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, ஒவ்வொரு சுற்றுக்களாக தேர்வு நடைபெறும்.

அந்தவகையில், இந்தக் குழுவின் விதிகளுக்கு மாறாக முன்மொழிவுகள் இருந்தால் அந்த ஊர்தி நிராகரிக்கப்படலாம். ஒருவேளை மாநிலங்கள் கொடுக்கும் தீமில், ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டியதிருந்தால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அந்த குழு அறிவுறுத்தல்களை வழங்கும். அதனை ஏற்றுக்கொள்ளும் முன்மொழிவுகள் அடுத்ததடுத்த சுற்றுகளுக்கு தேர்வுசெய்யப்பட்டு, பட்டியல் இறுதி செய்யப்படும்.

இவை அனைத்துமே நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதில் தேர்வாகும் முன்மொழிவுகள் பாதுகாப்புத்துறையின் மேற்பார்வையில், அவர்கள் சொல்லும் இடத்தில் அலங்கார ஊர்திகளாக தயார் செய்யப்படும்.

அவை தயாரான பிறகு, குடியரசு தினத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு மாடல்கள் காண்பிக்கப்படும். தீவிரமான ஆலோசனைகள் மற்றும் சோதனைகளுக்குப்பிறகே அலங்கார ஊர்திகள் விழாவில் பங்கேற்க முடியும்.

விழா நிறைவடைந்த பிறகு, இந்த அலங்கார ஊர்திகள் டெல்லி செங்கோட்டையில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். இதில் சிறந்த அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தன்றே அவற்றுக்கு பரிசுகளும் வழங்கி கவுரவிக்கப்படும்.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக மனோஜ்குமார் கோபாலன்

Exit mobile version