தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், முதல் போக நெல் சாகுபடியை பாதிப்பின்றி அறுவடை செய்வதற்காக முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டியில் உள்ள 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையினால் தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. கடந்தாண்டு நவம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தபோது, முதல் போக பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் அளவு குறைந்ததால், அணையின் நீர்மட்டம் 47 அடியாக சரிந்தது.
இதனையடுத்து முதல் போக சாகுபடியை பாதிப்பின்றி அறுவடை செய்ய, முறைப் பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி அணையில் இருந்து தொடர்ந்து 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு பிறகு மூன்று நாட்கள் நிறுத்தப்படும். இதனால், ஆயக்கட்டு பகுதிக்கு 40 கனஅடி, புதிய ஆயக்கட்டு பகுதிக்கு 20 கனஅடி என வினாடிக்கு 60 கனஅடி நீர் அணையிலிருந்து திறக்கப்படுகிறது.