விடுதலை செய்யக் கோரி சிறையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த முருகன், நளினி ஆகியோருடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோரி முருகனும் அவரது மனைவி நளினியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகன் 14 நாட்களும், நளினி 7 நாட்களும் உண்ணாவிரத்தை தொடர்ந்தனர். இதனால் இருவரது உடல் நிலையும் மோசமடைந்தது. சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுவதாக இருவரும் அறிவித்துள்ளனர்.