சத்துணவு முட்டை கொள்முதல் செய்ய பழைய முறைப்படி டெண்டர் கோர கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், மூன்று மாதங்களில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர் தொடர்பாக ஆகஸ்டு 20 ஆம் தேதி புதிய அரசாணை வெளியிடப்பட்டது. இதில் வெளி மாநிலக் கோழிப்பண்ணைகள் டெண்டரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துக் கோழிப் பண்ணையாளர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மண்டல அளவில் முட்டை கொள்முதல் செய்யும் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பழைய முறைப்படி, மாநில அளவில் டெண்டர் கோருவது எனக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் புதிய டெண்டர் கோரும் வரை, தற்போது முட்டை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்கள், அதே விலைக்குத் தொடர்ந்து சப்ளை செய்ய அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.