7 பேர் விடுதலைக்கு வித்திட்ட அதிமுக ; தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளித்த அதிமுக

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக அதிமுக அரசு மேற்கொண்ட மிக முக்கிய நடவடிக்கைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ஏழு பேரின் விடுதலைக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர முயற்சிகள் மேற்கொண்டார்.

7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 3 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும், பதில் வராவிட்டால், தமிழக அரசே அவர்களை விடுவிக்கும் என்றும் 2014 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கொலை தொடர்பான மிக முக்கியமான இந்த வழக்கில், மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தம், தமிழக எதிர்கட்சிகளிடையே மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் சரியான இணக்கம் காட்டாததால், 7 பேரின் விடுதலையில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அவர்களது விடுதலை விவகாரத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் தாமதத்தால், உச்சநீதிமன்றம் மூலமாகவும் 7 பேர் விடுதலைக்காக அதிமுக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

இது மட்டுமல்லாமல், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையிலும், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலைக்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியும், அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version