இந்திய நாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
கடந்த 1949 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் டிசம்பர் ஏழாம் நாளானது இந்தியா முழுவதும் கொடி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முப்படைகளின் நலனுக்காகவும், வீரர்களின் அரும்பணி, தியாகங்களை போற்றும் வகையிலும் மத்திய, மாநில அரசுகளால் இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முன்னாள் படை வீரர் நலத்துறை, கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் வாயிலாகவும் நிதியை திரட்டி, படை வீரர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக பயன்படுத்தி வருகிறது.
மேலும், மத்திய, மாநில அரசுகள் மூலமாக பெறப்படும் கொடி நாள் தொகுப்பு நிதியை பராமரிப்பதற்கான நிர்வாக குழு, பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையில் செயல்படுகிறது.
இதுதவிர இந்தியாவில் 32 மண்டலங்களில் கேந்திரிய சைனிக் வாரியம் என்ற அமைப்பானது உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் இருந்து பெறப்படும் நிதி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையில் நாட்டின் முப்படை வீரர்களுக்காக நிதியினை வழங்க மக்கள் அனைவரும் தாராளமாக முன்வர வேண்டுமென, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
தியாக உணர்வுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்களின் நலனை காக்கும் வகையில், படைவீரர்கள் கொடி நாளுக்கு, இந்திய குடிமக்களாகிய நாம் அனைவரும் உதவி புரிவது தலையாய கடமையாகும்.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் அஜித் உடன் செய்தியாளர் கண்ணதாசன்.