தமிழ்நாட்டில் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் மக்கள் பங்கேற்கும் வகையில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சாரம், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் நலன் கருதி அரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.