சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டிசம்பர் 4-ம் தேதி சிவகங்கை மாவட்டம் செல்லும் முதலமைச்சர், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து தொழில் கூட்டமைப்பினர், விவசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவினருடன் கலந்துரையாடுகிறார்.
சிவகங்கை செல்லும் வழியில் மதுரையில் புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். குறிப்பாக மதுரை மாநகருக்கு, 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில், ஆயிரத்து 450 கோடி மதிப்பிலான பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து 33 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்.