வங்கிகளில் கடன் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க, கடன் பெறுபவர்கள், பாஸ்போர்ட்டை வங்கியில் சமர்ப்பிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நிலையூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் மங்கலம். இவர், போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூருக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மங்கலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விருப்பமில்லாத வேலையை செய்வதற்கு பதில் அந்தப் பணியிலிருந்து விலகுவதே சிறந்தது என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற அங்கன்வாடி ஊழியருக்கு ஒரு வார சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று விட்டு, அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க, கடன் பெறுபவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட வங்கியில் சமர்ப்பிக்கும் வகையில், புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியள்ளது. கடனை திருப்பி செலுத்தும் வரை, பாஸ்போர்ட் திருப்பி ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும், குறித்த காலத்திற்குள் கடனை செலுத்தாவிட்டால், பாஸ்போர்ட் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.