தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
2020-2021ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதனையடுத்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் 20ம் தேதி வரையும் அன்றைய தினமே துணை முதலமைச்சரின் பதில் உரையும் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
அதன்படி, தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. 2 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்படும்.
தொடர்ந்து கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்வி துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அதன் பின் பட்ஜெட் மீதான விவாதம் துவங்குகிறது. இதனையடுத்து 20ம் தேதி துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் பதில் உரையும் நடைபெறுகிறது.