கோவில்பட்டி அருகே திமுக சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அரசு மீது குறைக்கூறி பேசிய கனிமொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் மற்றும் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கோவில்பட்டி அருகேயுள்ள டி.சண்முகபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்ற ஊராட்சி மன்ற செயல் அலுவலர் லஞ்சம் கேட்பதாக திமுகவினர் கனிமொழியிடம் குற்றம்சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சம்பந்தபட்ட ஊராட்சி மன்ற செயல் அலுவலர் பாலமுருகன், தன்மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்தது மட்டுமின்றி, உண்மையை நிரூபிக்காவிட்டால், மானநஷ்ட வழக்கு தொடரபோவதாக எச்சரிக்கை விடுத்தார். ஊராட்சிமன்ற செயல் அலுவலருக்கு ஆதரவாக பெண்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.