நேற்று மாலை டெல்லியின் பானிபட் பூங்கா பகுதி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற சேர்ந்த சாமன், சன்னி, கிஷண் ஆகிய மூன்று பேர் வேகமாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இது தனிப்பட்ட விபத்து அல்ல, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் செல்ஃபி மரணங்கள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி திருப்பதியை அடுத்த தானிமேடு காலனியை சேர்நத சிவக்குமார் என்பவர், குடி போதையில் தூக்கில் தொங்குவது போல செல்ஃபி எடுக்க முயன்றபோது உயிரிழந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி கர்நாடகாவின் கெலவரப்பள்ளி அணையில் செல்பி எடுக்க முயன்ற தேவேந்திரா என்ற இளைஞர் தவறி தண்ணீரில் விழுந்தார், அவரும் அவரை மீட்க முயன்ற சுற்றுலாப் பயணி கேசவனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
கடந்த 2017 ஏப்ரலில், கொல்கத்தாவில் ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்பி எடுக்க முயன்ற தாரக் மாகல் என்ற இளைஞர் தவறி விழ, அவரைக் காப்பாற தண்டவாளத்தில் குதித்த அவரது 4 நண்பர்கள் எதிரே வந்த ரயில் மோதி உயிரிழந்தனர்.
2017 ஜூலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்ற இளைஞர் காட்டு யானையுடன் செல்பி எடுக்க முயன்றபோது, யானை தாக்கியதால் இறந்தார்.
இன்னொரு பக்கம் மனிதர்களின் செல்ஃபி மோகத்தால் வன உயிரங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.
உதாரணமாக 2018 ஜூலையில் மேற்கு வங்கத்தில் பிடிபட்ட 6 அடி நீள மலைப்பாம்புடன் மக்கள் தொடர்ந்து செல்பி எடுக்க, தொடர்ந்து கைகள் மாறிய பாம்பு கடைசியில் உயிரிழந்த பரிதாபமும் நடந்தது.
செல்பிக்காக உயிரைப் பணயம் வைக்கும் மனநிலை ஒரு மனநோயாகப் பார்க்கப்படுகிறது, கடந்த 2016ஆம் ஆண்டில் செல்ஃபி தொடர்பான விபத்துகளால் இந்தியாவில் 76 பேர் மரணமடைந்தனர், செல்பி மரணங்கள் எண்ணிக்கையில் இந்தியா உலகின் முதல் இடமும் பெற்றது. எனவே செல்ஃபிக்காக சாகசங்கள் செய்வதைத் தவிர்ப்பது மக்களுக்கும் சமூகத்திற்கும் எப்போதும் நல்லது.