சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் உயிரிழப்புகள்….

அதிகரிவித்துவரும் சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயரிழப்புகளையும் தடுக்க, வாகன ஓட்டுனர்களின் திறனை ஆறு மாதத்திற்கு ஒருமுறை பரிசோதிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய ஆட்டோமொபைல்ஸ் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு..

நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஒரு பக்கம் அதிகரிப்பதுடன், சாலைவிதிகளை முறையாக பின்பற்றாத தினால் ஏற்படும் விபத்துக்கள் மறு பக்கம் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்களால், உடல் உறுப்பை இழந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சந்திக்கும் வேதனை சொல்லி மாளாது. இதற்கு காரணம், வாகன ஓட்டுனர்களும், பாதசாரிகளும் சாலை விதிகளை முறையாக பின்பற்றாததே காரணம் என்கிறது புள்ளி விவரங்கள்.

கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில் சுமார் 4 லட்சம் விபத்துக்களும் அதில் சுமார் 16 ஆயிரம் உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு பெரிய விபத்தும், நான்கு நிமிடத்துக்கு ஒரு உயிரிழப்பும் ஏற்படுகிறது என்கிறது புள்ளி விவரங்கள். இது போன்ற விபத்துக்களை தவிர்க்க, பாதுகாப்பாக வாகனத்தை எப்படி ஓட்டுவது என்ற முறையான பயிற்சி பெறாததே காரணம் என்கின்றனர் வல்லுனர்கள்.

மேலும், ஆசியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள simulator எனப்படும் அதிநவீன பயிற்சி வாகனங்களில் ஒருவர் பயற்சி மேற்கொள்வதன் மூலம், விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்கிறார் சிமுலேட்டர் வடிவமைப்பாளர் வினோத்.

விமான ஓட்டிகளுக்கு உள்ள நடைமுறையைபோல், வாகன ஓட்டுனர் உரிமம் பெறும் ஒருவரிடமும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவருடைய திறன் எப்படி இருக்கிறது என்பதை சோதனை செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள்.

சாலை பாதுகாப்பே உயிர் பாதுகாப்பு, சாலை விதிகளை மதிப்போம், விபத்துக்களை தவிர்ப்போம், அதிவேக பயணம் நொடியில் மரணம் போன்றவையெல்லாம் சாலையோரங்களில் இருக்கும் விளம்பரங்கள். ஆனால், சாலை விதிகள் என்னென்ன, பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது எப்படி என்று தெரிந்துகொண்டால் மட்டுமே விபத்துக்களை தவிர்க்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

Exit mobile version