இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிராவில் 8 ஆயிரத்து 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 342 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவதாக குஜராத் மாநிலத்தில் 3 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லியில் 2 ஆயிரத்து 918 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2 ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 2 ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஆயிரத்து 955 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புதியததாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 24 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை ஆயிரத்து 101 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திராவில் ஆயிரத்து 177 பேருக்கும், தெலங்கானா மாநிலத்தில் 1002 பேருக்கும், கர்நாடகத்தில் 511 பேருக்கும், கேரளாவில் 469 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.