பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ள நிலையில் பாதிப்புக்குள்ளான முசாபர்பூர் மாவட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.
முசாபர்பூரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பு கடந்த வாரங்களில் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு இருந்தபோதிலும் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு குறைவாக உள்ள காரணத்தால் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.
அருகிலுள்ள கயா மாவட்டத்திலும் இந்த காய்ச்சல் பரவிவரும் நிலையில், முசாபர்பூரில் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 88 குழந்தைகளும் கெஜ்ரிவால் மருத்துவமனையில் 19 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.