கேரள மாநிலத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27பேரைக் காணவில்லை.
ஆகஸ்டு ஆறாம் தேதி முதல் ஒருவாரக்காலம் கேரளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை என்னுமிடத்தில் நிலச்சரிவில் சிக்கிப் பலர் உயிரிழந்தனர். நிலச்சரிவுக்கு உள்ளான இடத்தில் மண்ணை அகற்றும் பணிகளில் மேலும் சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் கேரளத்தில் ஆகஸ்டு ஆறாம் தேதி முதல் மழை வெள்ளப் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 27பேரைக் காணவில்லை என்றும் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் 805 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.