கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காங்கிரஸ் எம்பி. வசந்தகுமார் மறைவு வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். வணிகம் மற்றும் சமூக சேவையில் வசந்தகுமாரின் பங்கு மிகப்பெரியது என்றும், தமிழக முன்னேற்றத்தின் மீதான அவரது ஆர்வம் கலந்துரையாடலில் தெரிந்தது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். கடின உழைப்பின் மூலம் உயர்ந்து ஏழை மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொது வாழ்வில் பணியாற்றி மக்களின் அன்பைப் பெற்ற வசந்த குமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான வசந்தகுமார் உயிரிழந்த துயரச் செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக கூறியுள்ளார். இதேபோன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.