மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மின் தடை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என மருத்துவமனையின் டீன் சுகாதாரத்துறைக்கு அறிக்கை அளித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின் தடை ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன்,மல்லிகா, பழனியம்மாள் ஆகிய 3 பேர் செயற்கை சுவாசம் தடைபட்டு இறந்து போனதாக செய்திகள் வெளியானது. இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக சுகாதாரத்துறை, மருத்துவமனையின் டீன் வனிதாவுக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் 3பேர் உயிரிழப்புக்கு மின் தடை காரணமில்லை என டீன் வனிதா அறிக்கை அளித்துள்ளார். உயிரிழந்த அனைவரும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவித்துள்ள அவர், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட அறையில் 10 பேர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதில் 7 பேர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பேட்டரி பேக் அப் மூலம் செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மின் தடை ஏற்படுவதற்கு முன்பே சிகிச்சை பெற்று வந்தவர்கள் இறந்து விட்டதாகவும் டீன் வனிதா தெரிவித்துள்ளார்.