விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த வீரர்களுக்கு, அர்ஜுனா, துரோணாச்சார்யா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.
சச்சின் எப்படி கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படுகிறாரோ, அதுபோல்தான், ஹாக்கியில் தயான் சந்த். நிகரற்ற பல சாதனைகள் படைத்தவர். உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் 1905-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ல் சமேஷ்வர் சிங், சாரதா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் தயான்சந்த்.
இவரது தந்தை பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். இவரைப் பின்பற்றி, தயான்சந்த்தும் தனது 16-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். ஹாக்கி பயிற்சியில் சேருவதற்கு முன்புவரை தயான்சந்த் ஒரு மல்யுத்த ஆர்வம் கொண்டவராகவே இருந்தார் என்பது வியப்பிற்குரிய விஷயம். எப்போது ஹாக்கி மட்டையை தன் கையில் எடுத்தாரோ, அன்று முதல் இறக்கும் வரை அவரின் செயல்பாடுகள் அனைத்தும் ஹாக்கியைச் சார்ந்தே இருந்துள்ளன.
தனது கடுமையான பயிற்சியின்மூலம் இந்திய ராணுவ ஹாக்கி அணியில் வெகு விரைவில் இடம்பிடித்தார். 1926 வரை இந்திய இராணுவ அணிக்காக விளையாடினார். ஒலிம்பிக்கில் ஹாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தேசிய அணிக்குத் தேர்வானார். அன்று முதல், இவர் ஓய்வுபெறும் வரை இந்திய ஹாக்கி அணியை ஒரு இரும்புக் கோட்டையாகவே மாற்றியமைத்திருந்தார். ஹாக்கியில் இவர் இடம்பிடித்திருந்த இந்திய அணி, 3 முறை தங்கப்பதக்கம் பெற்றது.
ஒருமுறை, கிரிக்கெட் உலக ஜாம்பவான் டான் பிராட்மேன், தயான்சந்த்தைப் பார்த்து, `நான் கிரிக்கெட்டில் ரன் அடிப்பதைப்போன்று இவர் ஹாக்கியில் கோல் அடிக்கிறார்’ என்றார். போட்டியின்போது, பந்தைத் திறமையால் தன்வசப்படுத்தி வைத்திருப்பதைக் கண்டு, அவரின் ஹாக்கி மட்டையில் காந்தம் எதுவும் இருக்கிறதா என்று சோதித்த நிகழ்வுகளும் உண்டு. 1936-ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக்கில், இந்திய அணியின் கேப்டன் ஆனார் தயான் சந்த். ‘ஒலிம்பிக் மைதானத்தில் மேஜிக் ஷோ நடக்கிறது. இந்திய மந்திரவாதி தயான் சந்த் ஹாக்கி மட்டையால் மேஜிக் காட்டுகிறார், பார்க்கத் தவறாதீர்கள்’ என பெர்லின் பத்திரிகைகள் விளம்பரம் செய்தன.
இந்திய ஹாக்கி அணி, ஜெர்மனியை 8 க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றது. உலகமே ஹிட்லரை பயத்துடன் கண்ட வேளையில், அவரின் சொந்த நாடான ஜெர்மனியில், அவரின் கண்முன்னே ஜெர்மனியை வீழ்த்தி, நமது தேசத்தை தலைநிமிரச்செய்தார் தயான் சந்த்.
தயானின் ஆட்டத்தைக் கண்ட ஹிட்லர், அவரது ரசிகராக மாறி, ‘‘ஜெர்மனி ராணுவத்தில் கர்னல் பதவி தருகிறேன், இங்கேயே வந்துவிடுங்கள்” என்றார். உலகமே பார்த்து நடுங்கும் ஒரு மனிதரான, வானளாவிய அதிகாரம்கொண்ட ஹிட்லரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த தயான், ஒரு நொடிகூட யோசிக்கவில்லை, ‘‘தாய்நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டு அணிக்கும் விளையாடும் உத்தேசம் இல்லை” எனச் சொல்லிவிட்டார்.
1956-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து மேஜர் அந்தஸ்துடன் தயான் ஓய்வுபெற்று, உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் வசித்தார். தயானின் இறுதி நாட்களில் புற்றுநோய் தாக்கியது. 1979-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி, அரசு மருத்துவமனை ஒன்றில் மறைந்தார் தயான் சந்த்.
இவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக, இந்திய அரசு, 2002-ம் ஆண்டு முதல், விளையாட்டுத்துறையில் சாதனை படைப்போருக்கு, இவரின் பெயரில் விருது வழங்குகிறது. இவரின் பிறந்தநாளை, தேசிய விளையாட்டு தினமாக அங்கீகரித்துள்ளது.
அவர் ஹாக்கியை விளையாடவில்லை; மைதானத்தில் மாயாஜாலம் நிகழ்த்தினார். ஆம், ஹாக்கியில் இவரின் ஒவ்வொரு அசைவும் விந்தையே. இந்திய ஹாக்கியின் கடவுள் தயான் சந்த் என்பதுதான் நிதர்சனமான உண்மை…