அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல், அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், புயல், மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில், லட்சத்தீவுகள் அருகே, கடந்த மே 13ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, படிப்படியாக வலுப்பெற்று, அதி தீவிர புயலாக உருமாறியது. டவ்-தே என பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல், அப்படியே வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, குஜராத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இதனால், கேரளத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கோவா மாநிலத்திற்கு தென்மேற்கே 100 கிலோமீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த காற்று வீசி வருவதால், மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக, கர்நாடகா, கோவா, மற்றும் கேரள மாநிலங்களில், இதுவரை 4 பேர் உயரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும், மஹூவாவுக்கும் இடையே, நாளை காலை புயல் கரையைக் கடக்கும் எனவும், அப்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 1988ம் ஆண்டு குஜராத்தை தாக்கிய காண்ட்லா புயலை விட, டவ்-தே புயல் அதிக வேகத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மாநிலத்தின் கடற்கரையோரம் வசித்து வந்த ஒன்றரை லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.