குலசேகரப்பட்டினம் தசரா விழாவைப்போல் தமிழகத்தின் பல்வேறு கோவில்களிலும் தசரா விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் உள்ள சின்ன குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தசரா நிறைவு நாளான நேற்று முத்தாரம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காளி, விஷ்ணு, அம்மன், விநாயகர், அரக்கர்கள் எனப் பல்வேறு வேடமணிந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும் பக்திப் பரவசத்துடன் நடனமாடியும் முத்தாரம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
நாகர்கோவில் புலவர் விளை முத்தாரம்மன் கோவிலில் மகிஷாசுர சம்ஹாரம் நடைபெற்றது. பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் மேளதாளம் முழங்கப் பக்தர்கள் புடைசூழ வீதியுலா வந்தார். தன்னை எதிர்த்த மகிஷாசுரனைப் போரிட்டு இறுதியில் சூலாயுதத்தால் வீழ்த்தினார். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் விஜயதசமி நாளன்று அம்மனுக்கு அபிஷேகங்கள், தீப ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின் ஆதிபராசக்தியாக உருவெடுத்த அம்மன் தனது சூலாயுதத்தால் மகிசாசுரனை அழித்தார். இந்த நிகழ்ச்சியில் குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.