"தர்பார்" படத்திற்கு தடை கோரி மனு: லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ்

நடிகர் ரஜினிகாந்தின் “தர்பார்” படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்ஒய் (DMY) கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், லைக்கா நிறுவனத்திடம் 2.o படத் தயாரிப்புக்காக 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்குக் கடனாக வழங்கியதாகவும், அந்தத் தொகையை வட்டியுடன் சேர்த்துத் தங்களுக்குத் திருப்பி வழங்காமல் தர்பார் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், ஜனவரி 2ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க லைக்கா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

Exit mobile version