தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் கடலோரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் செய்து மிதந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்….
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோயில்.
இந்த பகுதிக்கு அருகே சதுப்பு நிலப்பரப்பில் மழைநீர், மற்றும் கடல் நீர் அதிகளவில் தேங்கியுள்ளது. இந்நிலையில், இந்த சதுப்பு நிலப்பரப்பில் இன்று திடீரென ஆயிரக்கணக்கான ஒய்லி வகை மீன்கள் செத்து மிதந்தன.இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள், அதிகளவிலான மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு மண்டபம் கடல் மீன் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அந்த இடத்திற்கு வந்த விஞ்ஞாணிகள் இறந்த மீன்களை ஆய்வு செய்துவிட்டு கூரியபோது, இவ்வகை மீன்களுக்கு 30 முதல் 32 பாரன்கீட் அளவுதான் நீரின் வெப்பம் இருக்க வேண்டும்.
ஆனால் இப்பகுதி காலி இடமாக இருந்து சமீபத்தில் பெய்து வரும் மழை நீர் தேங்கியதோடு கடல் நீரும் கலந்து இருப்பதால் நிலப்பரப்பு வெப்பமடைந்து நீரின் வெப்பமும் தற்போது 36பாரன்கீட் அளவிற்கு உள்ளது.
இதனால், மீன்கள் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இறந்திருக்கூடும் என்று தெரிவித்தனர். இருப்பினும், மீன்கள் இறப்பிற்கான முழுமையான காரணத்தைக் கண்டறிய மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் கூறினர்.
இதனையடுத்து, நகராட்சி சார்பில் அப்பகுதிகளில் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக பிளிச்சிங் பவுடர் மற்றும் பினாயில் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்த மீன்களை உண்ணவோ அல்லது கருவாடாக்குவதற்கு பயன்படுத்தவோ வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள், இறந்த மீன்களை சேகரித்து மணலில் புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது அப்பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.