மகாராஷ்டிரத்தில் பருவந் தவறிம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு எக்டேருக்கு 8,000 ரூபாயும், தோட்டக்கலைப் பயிர்களுக்கு எக்டேருக்கு 18,000 ரூபாயும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை ஓய்ந்த பின்னும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கியார், மகா புயல் எதிரொலியாகப் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் பயிரிட்டிருந்த மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து பேரிழப்பு ஏற்பட்டது.
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகளும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பை ஆளுநர் பகத்சிங் கோசியாரி வெளியிட்டுள்ளார். அதன்படி வேளாண் பயிர்களுக்கு ஒரு எக்டேருக்கு 8 ஆயிரம் ரூபாய் என்கிற கணக்கில் 2 எக்டேர் வரையும், தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஒரு எக்டேருக்கு 18 ஆயிரம் ரூபாய் என்கிற கணக்கில் 2 எக்டேர் வரையும் வழங்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
பயிர்கள் சேதமடைந்த பகுதியில் நிலவரி பெறுவதற்கும், பள்ளி கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.