இந்தியாவில் மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 50 நாட்களுக்கு பிறகு 1 லட்சத்து 52 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்படுவர்களை விட, குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

 புதிதாக 1 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்தைக் கடந்துள்ளது.

தினசரி பாதிப்பில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 20 ஆயிரத்து 378 பேரும், கேரளாவில் 19 ஆயிரத்து 894 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 3 ஆயிரத்து 128 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 814 பேரும், தமிழ்நாட்டில் 493 பேரும், கர்நாடகாவில் 381 பேரும் பலியாகியுள்ளனர்.

தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 26 ஆயிரமாக குறைந்துள்ளது.

இதுவரை 21 கோடியே 31 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version