திசை மாறும் வாயு புயல், குஜராத்தை தாக்க கூடும் என அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை குஜராத் மாநிலம் போர்பந்தர்- தியூ இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வாயு புயல், திடீரென திசை மாறி ஓமன் நாடு நோக்கி நகர துவங்கியது. முன்னதாக புயல் எச்சரிக்கையால் குஜராத் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் தங்கியிருந்த 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தனர். புயல் அபாயம் நீங்கியதால் அவர்கள் அனைவரும் தங்களின் இருப்பிடம் திரும்பினர்.
இந்தநிலையில் திசைமாறி சென்ற வாயு புயல் மீண்டும் குஜராத் மாநிலத்தை தாக்க கூடும் என அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் கஞ்ச் பகுதி அருகே புயல் கரையை கடக்கும் எனவும் கணித்துள்ளனர். இதனிடையே கடந்த வியாழக்கிழமை வீசிய சூறைக்காற்றினால் படகுகள் கடும் சேதமடைந்துவிட்டதாக குஜராத் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.