புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலையில் இன்று மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டது. இது நேற்று மாலை புயலாக வலுப்பெற்றுள்ளது. புரெவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கு 300 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 700 கிலோமீட்டர், பாம்பனுக்கு 530 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
திரிகோணமலை கடற்பகுதியில் இன்று மாலை அல்லது இரவுக்குள் கரையை கடந்து, தென்தமிழக பகுதிகளை நோக்கி புயல் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் பகுதிகளுக்கு இடையே நாளை மறுநாள் அதிகாலை புரெவி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதி கனமழைக்கும், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தஞ்சை உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது